காட்டாறு குறுந்திரைப்பட விமர்சனம்

காட்டாறு. போருக்குப் பின்னரான, போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நிகழ்கால வாழ்க்கை போராட்டத்தினைக் கதைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதோர் யதார்த்த காவியம்.
         உண்மையிலும் குறுந்திரைப்படங்கள் எனும்போது இயக்குனர்கள் தன் கற்பனா சக்திக்கு விம்பம் கொடுத்து காட்சிப்படுத்துதைக் காட்டிலும் நிஜத்திலே, சமகாலத்தில் மக்கள் மனங்களோடு ஒன்றிப்போய் உள்ள உணர்வுகளை அவர்கள் மனங்களினின்று படமாக்குவதானது குறுந்திரைப்படங்களின் வெற்றியினை ஆரம்பத்திலேயே பதிவு செய்து விடுகின்ற உத்தியாகக் காணப்படுகின்றன. இவ்வாறான படைப்புக்களே காலத்தின் தேவையும் ஆகின்றது.
                அந்த வகையிலே இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தில் பிற்பாடு போரிலே பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களாகிய நம் தமிழ் உறவுகளின் தற்போதைய துன்பியல் பக்கங்களை தன் கதைக் கருவாக கோர்த்து காட்டாறு எனும் யதார்த்தபூர்வமான வரலாற்று ஆவணப்படுத்தலில் கால் பதித்திருக்கிறார் இயக்குனர் தீபச்செல்வன்.
                                  உரிமைகளையும் உடமைகளையும் இழந்து வாழ்வினை தொலைத்து நிற்கும் நம் தமிழ் சமூகத்தின் மத்தியில் அவர்களின் கதைகளை பேசுகின்ற காட்டாறு ஒரு இனத்தின் கதை சொல்லியாக காணப்படுகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே போருக்குப் பின்னருமான இராணுவத்தினரதும்  போலீசாரினதும் நிலைப்பை காட்சிப்படுத்தி படத்தின் இடைநடுவே "புலிகளின் மீள் எழுச்சியை  இராணுவம் தடுக்க நடவடிக்கை" என்று ரேடியோவில் செய்தி கேட்டு கதாநாயகன் மணி தன் மனைவியிடம் கூற இது வழமையான நடக்கிறது தானே என்று மனைவி சொல்வதுமாக படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அவ்வளவு யதார்த்த தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
            கால்களை இழந்த நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்தவர்கள் தொடர்ந்தும் வாழ்க்கை போரிலே தம்மை ஈடுபடுத்தி நாளாந்த வாழ்வில் அவர்கள் அனுபவித்த உடல் ரீதியான மற்றும் உளரீதியான காயங்கள் என்பனவற்றை படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்குமூடாக தத்துரூபமாக வடிவமைத்து ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வை சற்றும் கூட தராமல் எமது வாழ்வை கண்ணாடி முன் நின்று நாமே ஓட்டிப் பார்ப்பது போன்ற உணர்வை எழவைக்கின்றது காட்டாறு.

படத்தின் ஆரம்பத்திலேயே காயமடைந்த ஆட்டுக்குட்டியை தனது தோளில் சுமந்தவாறு தன் பிள்ளையை போல வைத்தியரிடம் சென்று காண்பிக்கும் காட்சியானது படத்தின் கதாநாயகன் மணி ஓர் இளகிய மனம் படைத்தவன் என்பதனை பார்வையாளருக்கு தெளிவுபடுத்துகின்றது.

மேலும் மணி வேலைக்குச் செல்லும்போது "ஏழை என்றால் அது ஒரு அமைதி" என்ற பாடலை ரேடியோவில் கேட்டுக் கொண்டு வருவதும் ஆடு மேய்க்கப் போகும் போது மனைவி தம் காதல் கதையை மீட்டிப் பார்த்து கடைசியில் இருவருக்குமான ஈழக்காதலை கவிதையோடு வெளிப்படுத்துவதும் என ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து சிறிதும்கூட சலிப்பை ஏற்படுத்தாது படத்தோடு ஆழமாக எம்மை  இணைத்து கதையை நகர்த்திச் செல்வது பாராட்டுதலுக்குரியது.

படத்தின் மொழிநடை பற்றி சொல்லியே ஆகவேண்டும் ஒவ்வொரு வார்த்தை பிரயோகங்களும் அத்தனை அற்புதமானவை. முன்னாள் போராளி இடத்தில் காதல் வசப்பட்ட பெண் தன் காதலை தெரிவிக்கையில்,
  "எனக்கு சொந்தம் எண்டு யாரும் இல்லை"

"நாட்டு சனம் உங்களுக்காகத்தான் இருக்கு"

"நான் என்ர கனவுகளுக்குள்ள யாரையும் நுழைய விட்டதில்லை"

"கனவில் மட்டும் இல்ல நிஜத்திலும் நான் உங்களோட தான்"

"இது சரி வருமா"

"ஏன் நாட்ட நேசிக்கிறவங்க மனச நேசிக்க கூடாதா"

"என்னோட இலட்சிய கனவுகளை உங்களால சுமக்க  ஏலுமா"

"நாங்களும் சுமந்தோம் நிறைய கனவுகளை உங்களைப்போலவே"

என்ற சம்பாசனை ஒரு போராளியின் அதிஉச்ச ஒழுக்க காதலை,  காதலை ஏற்றுக்கொள்ளும் தருணத்தை மிக கச்சிதமான உணர்வார்ந்த மொழிநடை உரையாடலுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

காதல் காலங்களின் கனவு மீட்சிக்கு பின், அவர்கள் இருவரும் தங்கள் இழப்புகளை கூறி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி அழும் நடிகையின் கண்ணீர் எம்மையும் சேர்த்து அழ வைக்கின்றது.

மேலும் மணி வீதியில் செல்லும்போது சைக்கிள் காற்று போய் நின்ற வேளையில் வயதான அம்மா ஒருவருடன் நடந்த உரையாடலின் போது

"உந்த கிழங்கு  காணுமோன?"

"மூன்று பிள்ளைகளைப் பெற்று நாட்டுக்கு கொடுத்த வயிர டா இது.  பசி என்ன பசி"
           என அவர் பதிலளிப்பது மாவீரர்களை பெற்றதன்  வீரத்தின் வெளிப்பாடு.


வேலை பறி போன பின்பு வீட்டுக்கு வந்து ஆட்டுக்குட்டியை வைத்து பார்த்தபோது மனைவி,
"என்னப்பா யோசிக்கிறியள்"

"ஆடுகள விக்க போறன்,
கை கால் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்களே ஒழிய எங்கட நம்பிக்கையையும் தைரியத்தையும் விளங்கிக் கொள்கிறாங்கள் இல்ல"                                          என்று அழுகையோடு கூறுவது யதார்த்தத்தின் உச்சங்கள்.

இறுதியாக சண்டையில் தன் நண்பர்கள் தடுத்த போதும்
 "என்ர கால் முறிஞ்சாலும் பரவாயில்லை நான் வாரன்" எனக்கூறி போரிலே பின்வாங்காமல் சண்டையிட்டு கால்களை இழந்தது நினைவில் நிறுத்திக்கொண்டு நடந்துசெல்லும் மணியின் பாத்திரப்படைப்பு ஒட்டுமொத்த விடுதலைப் போராளிகளுக்கும் சமர்ப்பணம் ஆகிவிடுகின்றது.

படத்திலே மனதோடு ஒட்டிக் கொள்ளும் பின்னணி இசை கதையோடு நம்மை ஒன்றிணைத்து பயணிக்க செய்கிறது.

படத்திலே தவறுகள் என சுட்டிக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. அப்படி இருந்தாலும் யாதார்த்த பூர்வமான  கதையின் கச்சிதமான நகர்வில் அவை காணாமல் போயின.
                                 ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் காட்டாறு, ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினத்தின் வரலாற்றுப் பொக்கிஷ படைப்பு.  நானும் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

Comments