செல்வச் சந்நிதி திருத்தலத்தின் மகிமை

கந்த புராணப் படலத்திலே செல்வச் சந்நிதி திருத்தலத்தில் வேலன் எழுந்தருளியமைக்கான வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறெனில் இற்றைக்கு 2000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்திலே முருகப் பெருமான் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று சூரபத்மன் முதலிய அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பராசக்தி அளித்த சக்தி வேலுடனும், இலட்சத்தொன்பது படை வீரர்களுடனும் தென் திசை நோக்கிப் பயணித்து திருச்செந்தூரை வந்தடைந்தார். திருச்செந்தூரில்  இருந்து கொண்டு தனது வீரம் மிகுந்த படைத் தளபதியாகிய வீரபாகு தேவரை சூரபத்மனுடைய மகேந்திரபுரி நோக்கி தூது அனுப்புகின்றார்… வீரபாகு தேவரும் முருகப் பெருமானுடைய வேண்டுகோளை ஏற்று மகேந்திரபுரி நோக்கித் தூது செல்கையில் சந்திக்காலம் வரவே முன்பு வல்லிநதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய தொண்டைமான் ஆற்றங்கரையில் கால் பதித்து தரித்து அவ் ஆற்றிலே ஸ்நானம் செய்து வல்வை இணை ஆற்றங்கரையோரம் இருந்த பூவரச மரத்தடியில் தான் கொண்டு வந்த வேலை நிறுத்தி முருகப் பெருமானுக்குச் சந்திக்காலப் பூஜை செய்து வழிபட்டார். இதன் காரணத்தினாலேயே இவ் ஆலயம் செல்வச் சந்நிதி என்ற காரணச் சிறப்புப் பெயருடன் மிளிர்கின்றது.

பிற்பட்ட காலத்திலே பரதவர் குலத்தில் பிறந்த மருதர் கதிர்காமர் தொண்டைமான் ஆற்றிலே தொழில் புரிந்து கொண்டிருக்கையில் முருகப்பெருமான் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து மருதர் கதிர்காமரை ஆற்றங்கரையோரம் அழைத்து நின்றார். மருதர் கதிர்காமரோ கரைக்கு வருவதற்கு மறுப்புத் தெரிவித்து நிற்க அவரை முருகப் பெருமான் வற்புறுத்தி கரைக்கு வருமாறு அழைத்து நின்றார். மருதர் கதிர்காமர் ஆற்றங்கரைக்கு வந்து தன்னை அழைத்ததிற்கான காரணத்தை ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகப் பெருமானிடம் கேட்டு நிற்க அச் சிறுவனோ மருதர் கதிர்காமரோடு அன்போடு கதை பேசி நின்றார்.



பின்னர் அச் சிறுவன் ஆங்கோர் இடம் காட்டி அவ் இடத்திலே குடில் ஒன்றை அமைத்து அறுபத்தைத்து ஆலமிலைகளிலே அன்பொழுக அமுத்திட்டு பயற்றங் கறியையும் பக்குவமாய் செய்து படைத்து ஆங்கே பூஜை  வழிபாடு புரிந்திட வேண்டுமென்றார். வியப்படைந்த கதிர்காமர் ஆடு மேய்க்கும் சிறுவனிடம் விளக்கங்கள் கேட்டிட ஆடு மேய்க்கும் சிறுவன் முருகனென தன்னை உணர்த்தி நின்றார். மருதர் கதிர்காமரோ தான் பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்ததினால் மந்திரங்கள் மற்றும் பூஜை முறை தெரியாத தன்மையினை முருகப்பெருமானிடம் குறிப்பிட்டு நின்றார்.

முருகப் பெருமானோ “கலங்காதே கதிர்காமா” என அவரை அன்போடு தேற்றி தான் உறைகின்ற கதிர்காமம் என்கின்ற திருத்தலத்திற்கு அவரை அழைத்துச் சென்று அங்குள்ள பூஜை முறைகளையெல்லாம் தான் உணர்த்தி மந்திரம் எதனையும் மனதிலே கொள்ளாமல் வெண்ணிறத் துணியால் வாயை மூடிக் கட்டி நின்று மௌனித்தாங்கு மனதிலே தமையமர்த்தி புனிதம் மிகு பூஜை செய்ய வேல் ஒன்றையும் கையளித்து தொலை தூரம் சென்றதுமே ஒளி வடிவாகி மறைந்தார்.



Comments