ஆடம்பரங்களும் அத்தியாவசியமும்

இன்றையதினம் எமது ஆசிரியர் ஒருவரின் பிறந்தநாள். காலையில் அவரை கண்டவுடன் பிறந்ததின வாழ்த்துக்களை கூறினேன். தான் பிறந்ததினத்தை கொண்டாடுவதில்லை என சிறு புன்னகையுடன் தனக்கே உரிய பாணியில்  பதிலளித்தார்.
ஒரு சில நிமிடங்கள் பின் மாணவர்கள் சேர்ந்து பிறந்ததின கேக் இனை வெட்டுவதற்கு எத்தணித்த வேளையிலே

" பிள்ளையள்  உங்களின்ர அன்புக்கு நன்றி. ஆனா நான் பிறந்த தினத்தை கொண்டாடுறது இல்லை. எங்கட சனம் எத்தினையோ பேர் சாப்பிடுறதுக்கு கூட சரியா கஷ்ரப்படுற நேரத்தில நாங்கள் இப்பிடி பிறந்த தினத்தை கொண்டாடுறது சரியில்லை. நாளைக்கு தீபாவளியை கொண்டாட கூட இயலாதவையள் இருக்கினம். இந்த நிலையில இதெல்லாம் தேவையில்லாத ஒண்டு. நீங்கள் கேக் வாங்கின காசக்கூட யாருக்கும் கஷ்ரப்பட்டவைக்கு உதவியிருந்தா நான் நல்ல சந்தோசப்பட்டிருப்பன்"

என்றவாறு எமது அன்பு வெளிப்பாட்டுக்கும் மதிப்பளித்து தனது நிலைப்பாட்டினையும் எமக்கு புரிய வைத்தார்.  ஆசிரியரின் எண்ணக்கிடக்கைகளை  உணர்ந்த நாம்  கேக்கை வெட்டி அதிலே சிறு துண்டை உண்ணுமாறு கொடுத்தபொழுது அதை தட்டிக்களிக்காமல்  எமது விருப்பத்திற்கும் தன் மனவோரத்தில் இடம் கொடுத்தார்.
   
இதன் பிற்பாடு;மதிய உணவிற்காக யாழ் நகரப்புற கடைக்கு புறப்படுகிறேன். அங்கே நாளைய தீபாவளி தினத்தை கொண்டாடுவதற்காய் ஆடைகள், தின்பண்டங்களை கொள்வனவு செய்வதற்காக நகரப்புறமெங்கும் மக்கட்கூட்டம் அலை மோதுகிறது.

இதற்கிடையிலேதான் அந்தக்குரல் என்னை திரும்பிப்பார்க்க வைக்கிறது.
        "  அக்கா ஊதுபத்தி வாங்குங்கோவன். இன்னும் நான் சாப்பிடக்கூட இல்லை அக்கா. காலைல இருந்து விக்குறன் யாரும் வாங்கேல. வாங்குங்கோவன் அக்கா" ..

சாப்பிடவில்லை என அந்த சிறுபையன் கூறியது பொய்வார்த்தைகளில்லை என்பதை பசியால் ஒட்டி உலர்ந்து போயுள்ள அவனது வயிறும் வெய்யிலில் வாடி வதங்கியிருக்கும் அவன் முகமும் எனக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருந்தது. ஒரு நூறு ரூபா தாளினைக்கொடுத்து அவனிடம் ஊதுபத்தியை வாங்கினேன். மீண்டும் அவன் ஊதுபத்திகளை விற்கத்தொடங்குகிறான்.

 நான் வந்த வேலையை  முடித்துக்கொண்டு வங்கி ஒன்றிற்குள் நுழைந்தேன். அங்கே பாடசாலை சீருடையுடன் தமது பிள்ளையை அழைத்து வந்த ஒரு தாய் தந்தையரைக் காண்கிறேன். வறுமைப்பட்டவர்களென்பதை அவர்கள் தோற்றத்திலும் அவர்களின் உரையாடல்களிலுமிருந்தும் தெரிந்து கொண்டேன்.  எனதருகே வந்து அமர்ந்த தாய், வங்கி ஊழியரிடம்
                         " புத்தகத்தை ஒருக்கா அப்டேட் பண்ணி தாங்கோ" என்று கூறி கணக்கு  புத்தகத்தை கொடுக்கிறார். வேலையை முடித்து புத்தகத்தை திருப்பி கையளித்தார் வங்கி ஊழியர்.
"பரிசு ஒண்டும் இல்லையோ" ஏக்கம் கலந்த மெல்லிய தொனியில் தாயின்குரல் .

" இல்லை அம்மா, கணக்கில காசு போட்டாத்தான் பரிசு தருவம்" வங்கி ஊழியரின் பதில்.

அவர்களால் ஏமாற்றத்தை மட்டும் பெற்றுக்கொண்டு வெளியேற முடிந்தது.

ஆசிரியரின் ஆதங்கத்தை இன்றையநாளின் இந்த இரு அனுபவங்களூடு அறியக்கிடைத்தது.

Comments