சர்வதேச மகளிர் தினம்


உலகெங்கிலும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத்தனம், ஆணாதிக்கம், பண்பாட்டு ரீதியான அடக்குமுறைகளை களைந்தெறிந்து பெண்விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மகளிர் தினமதை நாம் எளிமையாக கொண்டாடினாலும் கூட இந்த மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு காரணமான போராட்டங்களும் வெற்றிகளும் அத்தனை எளிதானவை அல்ல. இவ்வாறாக மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடுவதன் வரலாற்றுப் பின்னணியைச் சற்று நோக்குவோமாக இருந்தால்,
                                                       அடக்குமுறைகள் எங்கு ஆதிக்கம் செலுத்துகின்றதோ அங்கேதான் விடுதலைக்கான வேட்கையும் கிளர்ந்தெழுகின்றது. அந்தவகையிலே 1857ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இது பூவையர்களாலும் பூமியைகப் பிளந்து அதன் உள்ளேயும் பணிபுரிய இயலும் என  உலகிற்கு பறைசாற்றிற்று. ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் வேலை வழங்கப்பட்டதே தவிர அவர்களின் உழைப்பிற்கான ஊழியமானது தகுந்த அளவில் வழங்கப்படவில்லை என்பதே உண்மையான விடயம் ஆகும். இவ்வாறாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு பெண்ணினம் ஆவேசம் உற்றது. ஆணுக்கு நிகரான உரிமை கோரியும் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கக் கோரியும் பெண் விடுதலையை நோக்கமாகக் கொண்டும் அன்றைய காலகட்டத்தில் பெண்களினால் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டது.
                                                                                                                               1857 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி அமெரிக்க அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் அரசின் உதவியின் ஊடாக போராட்டமானது ஒடுக்கப்பட்டது. அதன்பிற்பாடு 1907 ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை என்பது வருந்தத்தக்கது. 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸாண்டிரா கெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆயிரத்து 1921 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.மென்மைக்கு ஒப்பானதுதான் பெண்மை என்று சொல்லி சரித்திரத்தில் பெண்களின் திறமைகளை பல்வேறு இடங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தாலும் கூட அதற்கு சற்றும் சளைக்காமல் அணு முதல் அண்டம் வரை தமது திறமைகளை நிலைநாட்டிய வண்ணமே அன்று முதல் இன்று வரை பெண்ணினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

                                                                  இவ்வாறாக இன்றைய தினத்தை பெண்கள் தினமாக கொண்டாடுவதற்கான வரலாற்று பின்னணிகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெண்களது சாதனைகள் அமையப் பெற்றிருக்கிறது. ”என்னதான் பெரும் மேதையாக இருந்தாலும் அவருடைய சவப்பெட்டியை திறந்து பார்த்தால் அங்கு கொஞ்சம் ஆணாதிக்கம் துடித்துக் கொண்டிருப்பதை காணலாம்” என்றார் தத்துவமேதை லெனின்.  ஆணாதிக்க சமூகம் தலை தூக்கிய காலத்தில் பெண்களுக்கான சுதந்திரமானது முடக்கப்பட்டதொன்றாகவே காணப்பட்டது. அவ்வாறான காலகட்டத்தில் பெண்கள் அணியும் ஆடை முதற் கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஆணாதிக்கத்தின் உள்நுழைவினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
                                                    "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என கல்விக்கான பாதையினை அன்றைய ஆண் சமுகம் தடைக்கற்களை போட்டு தகர்த்து விட்டது. இவ்வாறாக உண்பது தொடக்கம் உடுப்பது வரை ஆணின் விருப்பத்திற்கும் அவர்களின் சிந்தனைக்கும் மட்டும் செயல்வடிவம்  கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மங்கையர் வர்க்கம் அமர்த்தப்பட்டிருந்தது. பெண் என்பவளும் உலகில் உனக்கு ஒத்ததாய் இறைவனால் உனக்காக படைக்கப்பட்ட மானுடப் பிறவியில் அவதரித்த தெய்வப்பிறவியே என்பதை எந்த ஒரு ஆணும் ஏற்றுக் கொள்ளவோ ஏன் ஏற்றுக் கொள்வாதென்ன, அதற்கு முயற்சிக்கவோ யாரும் தயாராக இல்லை. ஆயினும் இவை அனைத்தையும் கடந்து பெண்ணினம் தம் சுதந்திரத்திற்காக போராடி பல சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைத்து தமக்கான ஒரு இடத்தை தக்க வைத்ததன் வெளிப்பாடே இந்த சர்வதேச மகளிர் தினம் ஆகும்.
        19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பெண் விடுதலை குறித்து உலகத்திற்கு உரக்க உரைத்த மகாகவி பாரதி, பெண்கள் அக்காலகட்டத்தில் அனுபவித்த, வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாத துன்பியல் பக்கங்களை தம் கவிவரிகளுக்காக வெளிப்படுத்தினார்.
                      " பெண் விடுதலை யென்றிங்கோர் நீதி பிறப்பித்தேன்;
                         அதற்குரிய பெற்றிகேளீர் மண்ணுக்குள் ளெவ்வுயிருந்                                                   தெய்வமென்றால் மனையாளுந் தெய்வமன்றோ?
                         மதி கெட்டீரே!
                         விண்ணுக்கு பறப்பதுபோற் கதைகள் சொல்வீர்                                                               விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்
                         பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்
                         பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை"
                                                                                                            என பெண் விடுதலையை வேண்டிய அவரது விடுதலை தாகத்தினை அவர்தம் தம் கவிதை படைப்புகளின் ஊடாக அறியக்கிடக்கின்றது. திரும்பும் திசையெல்லாம் சுதந்திர தாகத்தை பருக்கிக் கொள்வதற்கான திரவமாக சுதந்திரநீரை ருசிக்க நினைக்கும்  பெண் விடுதலை தாகத்தினை  தம் கவிதைகளில் கொட்டி தந்தவன் பாரதி.   பெண்ணடிமைத்தனத்தை முற்றாக இல்லாது ஒழித்து பெண்ணினம் தான் சுதந்திர காற்றை சுவாசிக்க நாம் வழிசமைக்க வேண்டும் என வீர முழக்கமிட்ட பாரதி பெண்களால் இயலாது என்பது இவ்வுலகில் எதுவுமே கிடையாது என்பதனை கவிகளுக்கூடாக வடித்தெடுத்துள்ளார்.
"சாதம் படைக்கவும் செய்வோம்
  புது சரித்திரம் படைக்கவும் செய்வோம் "
                                                                                என்றும்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
                                                                                 என்றும் கும்மிப்பாடல்கள் கூட பெண் விடுதலையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தினார் பாரதி.
                                                                                                                            இவ்வாறாக பெண் விடுதலைக்காக வீர முழக்கமிட்ட பாரதியின் கனவுகள் யாவும் தற்காலத்திலே நிறைவு பெற்றுள்ளது என்றேதான் கூற வேண்டும். பெண்களுக்கான சுதந்திரம் எவற்றுக்கெல்லாம் அவசியம் என பாரதி வலியுறுத்திச் சென்றாரோ அவை அனைத்தும் இன்று பெண்கள் மத்தியில் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதே உண்மை விடயமாகும். இன்றைய நவீன யுகத்தில் பரந்துவிரிந்த இப்பூவுலகில் வியாபித்துள்ள அனைத்து துறைகளிலும் பெண்கள் தம்மை நிலை நிறுத்தி பல சாதனைகளையும் நிகழ்த்தி சரித்திரம் படைத்தும் இருக்கின்றார்கள். உலகம் முழுவதும் 59 நாடுகளில் பெண் ஜனாதிபதிகள், பெண் பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 59 நாடுகளில் அரசாங்கத்திற்கு பெண்கள் தலைமை தாங்கிய உள்ளனர். தற்போதைய ஆண்டில் உலகம் முழுவதும் 10 நாடுகளில் பெண் பிரதமர்களும் 9 நாடுகளில் பெண் ஜனாதிபதிகளும் பதவி வகித்து வருகின்றனர். இவ்வாறாக ஒரு நாட்டினை ஆளக்கூடிய திறனும் அதற்கான சகல விதமான தகுதிப்பாடுகளும் இன்றைய பெண்களுக்கு உண்டு என்பது அவர்களுக்கு எல்லா விடங்களிலும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதனையே உணர்த்தி நிற்கின்றது. இருப்பினும் இன்றும் சில இடங்களில் பெண்ணடிமைத்தனமும் இருந்து வருவதனையும் மறுப்பதற்கில்லை.

                                     ஆயினும் கூட இவ்வாறான பெண் சுதந்திரத்தினை முன் நிறுத்தி அதன் வரையறைகளையும் மறந்து இன்று சில பெண்கள் தொழிற்பட்டு வருவதும் உண்மையானதும் கவலைக்கிடமுமானதோர் வெளிப்பாடாகும். அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம் தவறிழைப்பதற்கு வழிவகுக்கும் என்ற  அடிப்படை கோட்பாடானது பெண்கள் விடயத்தில் மெய்ப்பித்து போகும் அளவிற்கு இன்றைய சில பெண்களின் செயல்களும் நடவடிக்கைகளும் சமூகத்தில் காணக்கூடியதாக உள்ளது. சுதந்திரத்தின் பெயரில் வரையறைகளுக்கும் அப்பால் பண்பாடு, கலாசாரம் என்பவற்றை எல்லாம் மறந்து நவீனத்துவத்தின் நரம்பியல்களுக்கூடாக இரத்தம் ஊறிப் போனவர்களாக, தம் இயல்புகளை இழந்தவர்களாக, பண்பாட்டுக் கலப்பிற்கு உள்ளாகி தம் பாரம்பரியத்தை தொலைத்தவர்களாக மாறிவிடுகின்றார்கள். பாரதி வேண்டிய விடுதலை இதுதானா? பாரதி கண்ட புதுமைப் பெண்களா இவர்கள்? ஒருபோதும் இல்லை. விடுதலைக்கும் அப்பால் வெறிபிடித்துத் திரியும் பிசாசுகளைப் போல நடமாடும் நாட்டிய மங்கைகளை பாரதி வேண்டி நிற்கவில்லை. நவீனத்துவத்துடன் கூடிய நாகரிக மங்கையின் வரவையே நாடும் எதிர்பார்த்து நிற்கின்றது. பாரதி கண்ட கனவும் அதுவே. ஆக இன்றைய மகளிர் தினத்தில் மகளிர் ஆகிய நாம் நமக்கான சுதந்திரத்தையும் அதன் வரையறைகளையும் சரிவர உணர்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறந்த பெண்களாக திகழ்வோம் சாதனை புரிவோம் சரித்திரம் படைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோமாக.

Comments