நடுகல்

“நடுகல்”
புத்தகத்தை வாங்கிப் பார்த்ததும் முன்அட்டைப்படமே பிடித்துப்போயிருந்தது. இன்றே முழுவதையும் வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியிருந்தது.
போராட்டத்தின் மீதும் போராளிகள் மீதும் மக்கள் கொண்டிருந்த அன்பு, இந்திய இராணுவத்தின் கொடுமைகள், சின்ன வயதிலேயே போராட்டத்தின் நியாயப்பாடுகளை உணர்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்ட சிறுவர்கள், மாவீரர் ஒருவரின் தாயின் உணர்வு, முகாம் வாழ்க்கை, மீள்குடியேற்றம், அதன் பின்னும் தொடரும் இராணுவ அடக்குமுறைகள் என்று முழுப்புத்தகமும்
ஒரு சொட்டு சலிப்பு தட்டாது உயிரோட்டமாக எழுதப்பட்டுள்ளது. அதில் எனக்கு பிடித்த சில வரிகளை பட்டியலிடுகிறேன்.
.......
முள்வேலிமுகாமிலிருந்து வரும்போது அந்த தென்னங்கன்று குற்றுயிராய் இழுத்துக்கொண்டிருந்தது. பெரும்போரின் பின்னர் எரிந்து கருகிய நிலத்தில்
ஈக்கில் தடியாய் நின்றது. ஆட்களற்ற ஊரில் கவனிப்பாரின்றி, தண்ணீரின்றி காய்ந்து தாகமுற்றுக்கிடந்தது. ஆனாலும் உயிரைப்பிடித்துக்கொண்டிருந்தது. தூக்கி வந்த
பொருட்களை எல்லாம் வாசில் போட்டுவிட்டு இரு கன்றினுக்கு ஏங்கும் ஓர் ஆவென ஓடிவந்து அந்த தென்னங்கன்றைத்தான் முதலில் பார்த்தாள் அம்மா.
“எனக்காக என்ரை பிள்ளை காத்துக் கிடந்திருக்கிறான்”
.......
அந்தக்கல்லை அம்மா எங்கிருந்து எடுத்துவந்தாள்? அண்ணாவின் நினைவாக ஒன்றுமே இல்லைஎன்று சொல்லிக்கொண்டிருந்த போது ஒரு நாள் இந்தக் கல்லை வீட்டுக்குள்ஸ
கொண்டுவந்து வைத்தாள்.
“இதுதான் என்ர பிள்ளை”
அம்மாவின் முகத்தில் சற்று ஆறுதல் படர்ந்திருந்தது.
.......
“நீங்கள் பெரிய ஆளாய் வந்த பிறகு என்னவாய் வரப் போறியள்?”
“நான் இயக்கமாய் வரப்போறன்”
.......
“அண்ணை நாங்கள் பத்துப்பேர் இயக்கத்தில சேர வந்திருக்கிறம்”
“உங்களுக்கு எத்தினை வயது?”
“பத்துவயது முடியுது அண்ணை”
.......
“ஏன் அண்ணா அவங்களை இந்தியன் ஆமி கூட்டிக்கொண்டு போகுது?”
“இயக்கமாம் எண்டு கூட்டிக்கொண்டு போறாங்கள்”
“என்ன செய்வாங்கள்?”
“கொண்டுபோய் உடுப்பெல்லாம் கழட்டிப்போட்டு முள்ளுக்கம்பியாலை அடிப்பாங்களாம்”
.......
பதின்நான்கு வயதில் ஐந்தாவது முறையாக அண்ணா இயக்கத்தில் இணைந்து கொண்டான்
......
வன்னேரிக்குளம் அய்யனார் கோயில் திருவிழா வருகிறது. கச்சான்கடை போட பணமில்லை. அதனால் விற்க விறகு வெட்டியாச்சு. கொண்டுபோக இரு சைக்கிள் வேண்டும்.
ஒரு சைக்கிள் தான் ஓட்டும் நிலையில் இருந்தது. மற்றைய சைக்கிள் காத்துப் போயிருந்தது. அதன் ரியூப் மாற்ற வேண்டும். உடனே அந்த டயரைக் கழட்டினான் செந்தூரன்.
சீலைத்துணியில் வைக்கோலை வைத்துச் சுற்றி டயருக்குள் செருகிவிட்டு விறகை சைக்கிளில் வைத்துக்கட்டினான்.
“தமிழீழ சைக்கிள் ரெடி.. வெளிக்கிடுவம்”
......







புகைப்படம் எடுப்பதற்காக தனது நாள்சம்பளத்தில் மிச்சம்பிடித்து ஸ்டுடியோவிற்கு படம் எடுக்க செல்லும் குடும்பம்
......
அடுத்து அந்த கல்லைத்தூக்கினான் சிங்கபண்டார. இது என்ன கல்? புலியை நினைவுகூரும் அபூர்வ கல்லோ? கேள்வியோடு அந்தக் கல்லை திருப்பி திருப்பி பார்த்தான் அவன்.
“அது என்ர பிள்ளைஇ அவனை ஒண்டும் செய்யாதீங்கோ..”
அம்மா கையைக்கூப்பி கேட்டாள். கெஞ்சினாள். அழுதாள்.
“பயங்கரவாதியை நினைவுகூர இடமில்லை”
பேரதிர்ச்சியோடு நிலத்தில் விழுந்தாள் அம்மா.
அந்த கல்லை கீழே போட்டுவிட்டு துப்பாக்கியின் பின்பக்கத்தால் அதை நங்.. நங்.. இடித்தான் சிங்கபண்டார. பின் சப்பாத்தால் மிதித்தான். அந்த கல் உடைய மறுத்தது
......
இவ்வாறு எம்மக்களின் வாழ்வியல் சார்ந்த நிறைய விடயங்கள் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை அனுபவித்தவனின் பார்வைக்கும், கதை மூலம் கேள்விப்படுபவன் ஒருவனின்
பார்வைக்கும் இடையில் நிச்சயம் வித்தியாசம் காணப்படும். இதை ஈழத்தமிழர்கள் வாசிப்பதற்கும், இந்தியத்தமிழர்கள் வாசிப்பதற்கும்
இடையில் வித்தியாசம் இருக்கும் என்று நூலிலேயே சொல்லப்பட்டுள்ளது.
வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அடுத்த சந்ததிக்கு அவைகள் கடத்தப்பட வேண்டும்.
அதற்காக இவ்வாறான நிறைய புத்தகங்கள் தொடர்ச்சியாக வெளிவர வேண்டும்.
நடுகல்லை செதுக்கிய தீபச்செல்வன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

Comments